உள்ளூர் செய்திகள்
மரணம்

வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் தவறி விழுந்த முதியவர் பலி- அதிர்ச்சியில் மனைவியும் மரணம்

Published On 2022-05-16 04:28 GMT   |   Update On 2022-05-16 04:28 GMT
தாரமங்கலம் அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்ததை கண்ட அவரது மனைவியும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
தாரமங்கலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதையொட்டி தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.

தாரமங்கமலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி ஊராட்சி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் பாப்பணன் (வயது 95), இவரது மனைவி குஞ்சம்மாள் (90). இவர்கள் இருவரும் அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தனர். வீட்டின் முன்பு சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டதால் நேற்றிரவு அவர்களது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது.

இதனை அறிந்த பாப்பணன் கட்டிலில் இருந்து எழுந்து நடந்தார். அப்போது நிலை தடுமாறிய அவர் தவறி தண்ணீரில் விழுந்தார். பின்னர் சற்று நேரத்தில் அங்கேயே இறந்தார். இதனை அறிந்த உறவினர்கள் அங்கு திரண்டனர்.

பின்னர் மழை நீர் செல்ல வசதி இல்லாததால் தண்ணீர் வீட்டிற்குள் புகுந்ததால் அவர் இறந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து உடனே விரைந்து சென்ற வருவாய்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் கணவர் இறந்ததை பார்த்த குஞ்சம்மாள் அதிர்ச்சி அடைந்தார். மேலும் உடல்நலம் குன்றிய அவர் கடும் குளிரால் தவித்தார். இன்று காலை குஞ்சம்மாளும் பரிதாபமாக இறந்தார். கணவன்-மனைவி 2 பேரும் அடுத்தடுத்து இறந்ததால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது. இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News