உள்ளூர் செய்திகள்
மழை

கொடைக்கானலில் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Update: 2022-05-15 05:14 GMT
கோடை வெயிலால் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது கோடைவிடுமுறை தொடங்கியதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.

தற்போது குளுகுளுசீசன் தொடங்கியுள்ளதால் கோடை வெயிலை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று மாலை முதல் சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் முக்கிய சாலை சந்திப்புகளில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் மதியத்தில் சாரலாக தொடங்கிய மழை சுமார் 3 மணிநேரம் வெளுத்து வாங்கியது.

கோடை வெயிலால் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்தபோதும் அவர்கள் மழையில் நனைந்தபடி சுற்றுலா இடங்களை பார்வையிட்டனர். இதனால் பைன்பாரஸ்ட், மோயர் பாயிண்ட், ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, தூண்பாறை, கோக்கர்ஸ்வாக், பசுமைபள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் களைகட்டியது.

மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். சீசன் களைகட்டிய நிலையில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் அவர்களுக்கு இது ஓரளவு ஆதரவாக அமைந்துள்ளது.

Tags:    

Similar News