உள்ளூர் செய்திகள்
அமைச்சர் கே.என்.நேரு

எந்த தனி நபரும் அரசாங்கத்தை நிறுத்தி வைக்க முடியாது- அண்ணாமலைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி

Update: 2022-05-14 07:49 GMT
சொத்து வரி உயர்வு என்பது உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக மக்களுக்கு நன்மை செய்யவே தவிர அரசாங்கம் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
திருச்சி:

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் விடுபட்ட பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.

இதில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்டு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது,

இந்த மேம்பால பணிகளை தொடர பலரும் முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் இந்த அரசாங்கம் வந்த உடன் துறை அமைச்சரின் நடவடிக்கை மற்றும் எங்களது முயற்சியால் இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது.

மூன்று மாத காலத்திற்குள் சென்னை சாலையுடன் இணைக்கப்படும். அதன் பின்னர் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கப்படும்.

2018 ஆம் ஆண்டு அ.தி.மு.க. சொத்து வரியை உயர்த்தியது. பின்னர் தேர்தல் வந்த காரணத்தினால் நிறுத்தி விட்டார்கள். அப்போது 600 சதுர அடிக்கு 100 சதவீத வரி உயர்வு அறிவித்தார்கள். ஆனால் தற்போது 600 சதுர அடிக்கு கீழ் 25 சதவீத வரி உயர்வு மட்டுமே அமல் ஆகியுள்ளது.15-வது மத்திய நிதிக்குழுவில் நடப்பு ஆண்டுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்கிறோம். மீண்டும் நிதி அளிக்க வேண்டுமென்றால் வரியை உயர்த்த வேண்டும் என்று சொன்னார்கள். அதன் அடிப்படையிலேயே வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 53 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகிறார்கள். அனைவருக்கும் பாதாள சாக்கடை, குடிநீர், சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டி இருக்கிறது.

இந்த வரி உயர்வு என்பது உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக மக்களுக்கு நன்மை செய்யவே தவிர அரசாங்கம் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளப் போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கலைஞர் பெயரை வைக்க கூடாது என பா.ஜ.க அண்ணாமலை கூறுகிறார் என கேட்டதற்கு.

அந்த வீதிக்கு பழைய பெயர் தான் இருக்கிறது. கலைஞர் பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்திவைக்க முதலமைச்சர் கூறியுள்ளார் . ஆனால் வேண்டுமென்றே பிரச்சனையை கிளப்புகிறார்கள். கலெக்டரின் கை, காலை கட்டி வைக்க முடியாது. தனி நபர் அரசாங்கத்தை, அரசு அதிகாரிகளின் பணிகளை நிறுத்தி வைக்க முடியாது. அவ்வாறு செயல்பட்டால் வழக்கை சந்திக்க நேரிடும் என்றார்.

Tags:    

Similar News