உள்ளூர் செய்திகள்
போலீசார் கூட்டத்தை கலைக்க லேசான தடியடி நடத்தினார்கள்.

திருப்பத்தூர் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

Published On 2022-05-13 09:38 GMT   |   Update On 2022-05-13 09:38 GMT
திருப்பத்தூர் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்:

கிருஷ்ணகிரியில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று மாலை திருப்பத்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தது.பஸ்சை பர்கூரை சேர்ந்த பெரியசாமி என்பவர் ஓட்டி வந்தார்.

திருப்பத்தூர் அருகே கரியம்பட்டி என்ற இடத்தில் பஸ் வந்தபோது முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்த முயன்றது.அந்த நேரத்தில் திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்த சாதிக் அலி என்பவர் தனது குடும்பத்துடன் காரில் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. எதிரே வந்த அரசு பஸ் கார் மீது மோதுவது போன்று அச்சுறுத்தும் வகையில் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சாதிக் அலி அரசு பஸ் டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் அரசு பஸ் டிரைவர் பெரியசாமிக்கும், சாதிக் அலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சாதிக் அலி தனது ஆதரவாளர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பஸ் நம்பரை குறிப்பிட்டு நடந்த சம்பவம் குறித்து கூறினார்.

இதனால் அவரது ஆதரவாளர்கள் அரசு பஸ் ஹவுசிங் போர்டு அருகே வந்தபோது அங்கு தயாராக இருந்த சாதிக் அலியின் ஆதரவாளர்கள் பஸ்சை வழிமறித்து ஓட்டுநர் பெரியசாமி மற்றும் கண்டக்டரை சரமாரியாகத் தாக்கினர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அரசு பஸ் டிரைவர் பெரியசாமி அதே இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் பெரியசாமிக்கு ஆதரவாக வந்தவர்களையும் சாதிக் அலி ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் தாலுகா போலீசார் விரைந்து வந்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் பெரியசாமி புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள் கண்டக்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News