உள்ளூர் செய்திகள்
கைது

திருப்பூரில் கட்டுமான நிறுவன அதிபரை காரில் கடத்திய கும்பல்- 2 பேர் கைது

Published On 2022-05-13 06:24 GMT   |   Update On 2022-05-13 06:24 GMT
திருப்பூரில் கட்டுமான நிறுவன அதிபரை காரில் கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் எஸ்.ஆர்.நகரை சேர்ந்தவர் யோக ராஜ் (வயது 37). இவரிடம் திருப்பூர் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் ராஜா (47) என்பவர் திருப்பூரில் டாஸ்மாக் பார் ஏலம் எடுத்து தருவதாக கூறி கடந்த ஆண்டு ரூ.12.50 லட்சம் பெற்றதாக தெரிகிறது.

ஆனால் ராஜா, யோகராஜிக்கு பார் ஏலம் எடுத்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு ஆண்டிற்கும் மேல் ஆன நிலையில் இருவருக்கும் இடையே இது குறித்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கணபதிபாளையம் பகுதியில் ராஜா நின்று கொண்டிருந்தார். அப்போது காரில் நண்பர்களுடன் 5 பேருடன் வந்த யோகராஜ் , ராஜாவை கடத்தி சென்றார்.

தொடர்ந்து பணத்தை தரும்படி கேட்டுள்ளனர். மேலும் அந்த கும்பல் காரில் ராஜாவுடன் வீரபாண்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்துள்ளனர். இதற்கிடையே ராஜாவின் குடும்பத்தினர் அவரை சிலர் கடத்தி சென்றதாக வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் வீரபாண்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். காரில் ராஜா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அனைவரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் யோகராஜ் மற்றும் கடத்தலுக்கு உதவிய அவரது நண்பரான மங்கலம் சுல்தான்பேட்டையை சேர்ந்த கலைச்செல்வன் (45) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News