உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்-தென்காசி மாவட்ட எல்லையில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு

Published On 2022-05-12 09:55 GMT   |   Update On 2022-05-12 09:55 GMT
கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல் பாதிப்பையொட்டி தென்காசி மாவட்ட எல்லையில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
செங்கோட்டை:

கேரளாவில் புதிய வகை  காய்ச்சல் பரவி வருகிறது.கொல்லம், ஆரியங்காவு, அஞ்சல் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு அதிக அளவில் பரவி வரும் இந்த காய்ச்சலுக்கு தக்காளி காய்ச்சல் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

சிறுவர்களின் தோலில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் தோன்றுவதால் இந்த காய்ச்சலுக்கு தக்காளி காய்ச்சல் என்று அழைக்கின்றனர். இந்த காய்ச்சல் தமிழகத்தில் நுழைந்து விடக்கூடாது என்பதால் மாநில எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

வழக்கமாக தமிழகத்தில் இருந்து வர்த்தக ரீதியாகவும், பணி நிமித்தமாகவும் ஏராளமானோர் கேரளாவுக்கு அடிக்கடி சென்று வருவார்கள் என்பதால் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா மேற்பார்வையில் சுகாதாரத்துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனா காலத்தில் சுகாதாரத்துறையினர் புளியரை சோதனை சாவடியில் முகாமிட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர். இதனால் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து தொற்று பரவாமல் தடுக்கப்பட்டது.
 
அதேபோல் தற்போதும் தக்காளி காய்ச்சலால் தமிழகத்தை சேர்ந்த சிறுவர்கள் பாதிக்கப்பட்டு விடாமல் இருக்க சோதனை சாவடியில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News