உள்ளூர் செய்திகள்
மாணவிகள்

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை இறுதித்தேர்வு முடிகிறது

Published On 2022-05-12 07:25 GMT   |   Update On 2022-05-12 07:25 GMT
ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு ஜூன் 13-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை:

10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 31-ந்தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன.

மாநில அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த 5-ந்தேதி முதல் ஆண்டு இறுதி தேர்வு தொடங்கியுள்ளது.

1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். மற்ற நாட்களில் வரத்தேவை இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் காலையில் தேர்வு எழுதிவிட்டு மதியம் வீட்டிற்கு செல்கின்றனர்.

நாளை (13-ந்தேதி) கடைசி வேலை நாளாகும். நாளையுடன் தேர்வுகள் முடிகின்றன. 14-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு ஜூன் 13-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

2 வருடத்திற்கு பிறகு பள்ளி சிறுவர்கள் இந்த வருடம் ஆண்டு இறுதித்தேர்வு எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டது. நாளையுடன் தேர்வு முடிவதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு மாதம் கோடை விடுமுறையை கொண்டாடுவதில் ஆர்வமாக உள்ளனர்.

Tags:    

Similar News