உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஜவுளி தொழிலை பாதுகாக்க கோரி திருப்பூரில் 17-ந்தேதி உண்ணாவிரதம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு

Published On 2022-05-11 09:43 GMT   |   Update On 2022-05-11 09:43 GMT
திருப்பூா் தொழில் அமைப்புகள் சாா்பில் 5 மக்களவை உறுப்பினா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற 16,17 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.
திருப்பூர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நூல் விலை உயா்வு காரணமாக தற்போது பின்னலாடை நிறுவனங்கள்  மிகவும் நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளது. இதில் பின்னலாடை, விசைத்தறி, கைத்தறி என மொத்த ஜவுளி உற்பத்தித் தொழிலை நம்பி தமிழகத்தில் 25 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த ஒரு கோடிக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில் பஞ்சு, பஞ்சு நூல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது.

இந்நிலையில் திருப்பூா் தொழில் அமைப்புகள் சாா்பில் 5 மக்களவை உறுப்பினா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற 16,17 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.

நூல் விலை உயா்வுக்கு முக்கியக்காரணம் மத்திய அரசின் நிலைப்பாடுதான். இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) மூலம் விவசாயிகளிடம் கட்டுப்படியான விலையில் பருத்தியை கொள்முதல் செய்து, அதை உரிய விலையில் தொழில் துறையினருக்கு வழங்க வேண்டும்.

ஆனால் 2021 ம் ஆண்டு இந்திய பருத்தி கழகம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு தடுத்துவிட்டது. இதன் விளைவாக பன்னாட்டு காா்ப்பரேட் மற்றும் இந்திய பெருமுதலாளிகள், ஆன்லைன் வா்த்தக நிறுவனங்கள் பஞ்சு கொள்முதல் செய்து பதுக்கிவைத்து செயற்கையாக பற்றாக்குறையை உருவாக்கி விட்டனா்.

எனவேதான் பஞ்சு விலை இந்த அளவுக்கு உயா்ந்தது. 2020 ம் ஆண்டு 40 நம்பா் நூல் ஒரு கிலோ ரூ.270க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ ரூ.470க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் திருப்பூா் பின்னலாடை உற்பத்தி தொழில் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி இந்திய பருத்தி கழகம் மூலம் விவசாயிகளிடம் பருத்தியை கட்டுப்படியான விலையில் கொள்முதல் செய்து, ஆண்டு முழுவதும் பஞ்சாலைகளுக்கு சரியான விலையில் தட்டுப்பாடு இல்லாமல் பஞ்சு கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் பஞ்சு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் ஆன்லைன் வா்த்தகத்தை தடை செய்ய வேண்டும். பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் பஞ்சு, நூலை சோ்க்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வருகிற 17-ந் தேதி ஆயிரக்கணக்கானோா் பங்கேற்கும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது என்றாா். அப்போது திருப்பூா் மாவட்டச் செயலாளர் முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் குமார், உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Tags:    

Similar News