உள்ளூர் செய்திகள்
தோட்டத்தில் வெட்டப்பட்ட மரவள்ளிக்கிழங்கை தொழிலாளர்கள் கொண்டு செல்வதையும், அவற்றை லாரியில் ஏற்றுவதையும் படத்தில

வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு

Published On 2022-05-10 09:52 GMT   |   Update On 2022-05-10 09:52 GMT
பரமத்திவேலூர் பகுதியில் வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், மணியனூர், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, சிறுநல்லிக்கோவில், தி.கவுண்டம்பாளையம், திருமல், கபிலர்மலை, பெரிய மருதூர், சின்ன மருதூர், ஆனங்கூர், பாகம்பாளையம், கண்டி பாளையம், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ளனர். 

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை ,ஆத்தூர், மல்லூர், சின்னசேலம், மின்னாம்பள்ளி, கீரனூர், மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும்  கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். 

கிழங்கு ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து சவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் மரவள்ளி கிழங்கு மூலம் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் சில்லரை வியாபாரிகள் கிராமப்புறங்களுக்கு மரவள்ளிக்கிழங்கை கொண்டு சென்று கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். 
அதை வாங்கிய பொது மக்கள் கிழங்குகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு வேக வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், மிளகாய் போட்டு தாழித்து சாப்பிடுகின்றனர்.  

மேலும் சிலர் மரவள்ளிக்கிழங்கை தோலை அகற்றி விட்டு இரண்டு, மூன்று துண்டுகளாக வெட்டி உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடுகின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் சவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் சேக்கோ சர்வ் மூலம் விலை நிர்ணயம் செய்கின்றனர். 

கடந்த வாரம் சவ்வரிசி தயார் செய்யும் மில் அதிபர்கள் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.8 ஆயிரத்துக்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ9,500-க்கு வாங்கிச் சென்றனர். தற்பொழுது சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு   ரூ.9 ஆயிரத்துக்கு வாங்கிச் செல்கின்றனர். 

சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.11 ஆயிரத்துக்கு வாங்கி செல்கின்றனர். மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் ‌மரவள்ளி‌ கிழங்கின் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை உயர்வால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News