உள்ளூர் செய்திகள்
போதையில் மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்த வாலிபர்

போதையில் மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்த வாலிபர்- போலீசார் அபராதம் விதித்ததால் தீக்குளிக்க முயற்சி

Update: 2022-05-10 07:24 GMT
வண்ணாரப்பேட்டையில் போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு போக்குவரத்து போலீசார் ரூ.10 அபராதம் விதித்ததால் அவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம்:

வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளம் பகுதியில் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து உதவி ஆணையர் ராஜகோபால் முன்னிலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தண்டையார் பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவர் குடி போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார், அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ஆனால் செல்வம் அபராத தொகையை கட்ட மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் கண்டித்தனர்.

இதனால் மனமுடைந்த செல்வம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இருந்து பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோலை வாங்கிவந்து மீண்டும் அபராதத்தொகை தொடர்பாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென அவர், போக்குவரத்து போலீசார் முன்னிலையில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் செல்வத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறி அங்கிருந்த பொதுமக்களின் உதவியோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News