உள்ளூர் செய்திகள்
புதிய நீர்த்தேக்க பகுதியை தலைமை செயலாளர் இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்

சென்னையின் 6வது குடிநீர் ஆதாரமான ராமஞ்சேரி புதிய நீர்த்தேக்கம் கட்ட ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியது- தலைமைச் செயலாளர் ஆய்வு

Published On 2022-05-10 06:27 GMT   |   Update On 2022-05-10 06:27 GMT
கோடைக்காலத்தில் இந்த குடிநீர் ஏரிகள் வறண்டு விடுவதால் சென்னையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னையில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டி.எம்.சி. ஆகும். கோடைக்காலத்தில் இந்த குடிநீர் ஏரிகள் வறண்டு விடுவதால் சென்னையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டும், பலத்த மழைக்கு பின் ஏரிகளில் இருந்து திறந்து விடும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து புதிய நீர்த்தேக்கம் கட்டவும் நீர்வள ஆதார துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் வகையில் 6வது புதிய ஏரியாக பூண்டி அருகே உள்ள ராமஞ்சேரியில் 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் 2 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கக்கூடிய பிரமாண்ட நீர்த்தேக்கத்தை கட்ட திட்டமிட்டு உள்ளது. இதற்கு ரூ.700 கோடி செலவிட நீர்வள ஆதாரத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்தநிலையில் புதிய நீர்த்தேக்கம் அமைய உள்ள பகுதியை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், சார் ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News