உள்ளூர் செய்திகள்
தாசம்பாளையம் கிராமத்தில் பாகுபலி யானை சுற்றி திரிவதை படத்தில் காணலாம்

மேட்டுப்பாளையம் பகுதியில் மீண்டும் குடியிருப்புக்கு நடுவே சுற்றி திரியும் பாகுபலி யானை

Published On 2022-05-10 04:42 GMT   |   Update On 2022-05-10 04:42 GMT
மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

கோவை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்தது. அதன்பின்னர் சில மாதங்களாக யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மீண்டும் பாகுபலி யானை வனத்தை விட்டு வெளியேறி மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரிய தொடங்கியுள்ளது. இது அப்பகுதி மக்களிடமும் விவசாயிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சமயபுரம், நெல்லிதுறை, குரும்பனூர், தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாகுபலி யானை நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை தாசம்பாளையம், குரும்பனூர் கிராமங்களுக்குள் புகுந்தது. அங்குள்ள சாலைகளில் மெல்ல, மெல்ல நடந்து, நீண்ட நேரமாக அங்கேயே சுற்றி திரிந்தது.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுயானை பாகுபலியை விரட்டினர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் தாசம்பாளையத்தில் உள்ள குடியிருப்பு நிறைந்த பகுதிகளுக்கு நடுவே பாகுபலி யானை ஒய்யார நடைபோட்டு நடந்து சென்றது. இந்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

Similar News