உள்ளூர் செய்திகள்
பலி

கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

Update: 2022-05-09 09:23 GMT
கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே வெள்ளாளன் கோட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட சூரியமினிக்கன் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 55), எலக்ட்ரீசியன்.

இவர் இன்று காலை அந்த பகுதியில் ஒரு தோட்டத்தில் மின் மோட்டார் பழுதை சரிபார்க்க சென்றார். அப்போது மின்கம்பத்தில் இருந்து தோட்டத்துக்கு வரும் மின் இணைப்பில் பழுது இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் டிரான்ஸ்பார்மரை ‘ஆப்’ செய்து விட்டு மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்க்க சென்றபோது மின் மோட்டார் ஓடவில்லை. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதை அறியாத அவர் டிரான்ஸ்பார்மரை ‘ஆன்’ செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மின் கம்பத்தில் பழுது பார்த்து கொண்டிருந்த செல்லத்துரை மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுபற்றி கயத்தாறு போலீசில் புகார் செய்தனர்.

சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மின் ஊழியர்கள் மூலம் டிரான்ஸ்பார்மரை ‘ஆப்’ செய்து விட்டு மின் கம்பத்தில் இருந்து செல்லத்துரை உடலை கீழே இறக்கினர்.

பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags:    

Similar News