உள்ளூர் செய்திகள்
ராமதாஸ்

தீக்குளித்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கு வேண்டும்- ராமதாஸ்

Published On 2022-05-09 09:15 GMT   |   Update On 2022-05-09 09:15 GMT
பணக்காரர்களின் ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு, அதன் பின்னர் ஏழைகள் வீடுகளை அகற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கலாம் என ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவிந்தசாமி நகரில் வீடுகளை இடிக்க வேண்டும் என்பதில் எந்த பொதுநலனும் இல்லை. அவற்றை இடிக்க வேண்டும் என்று பொதுநல வழக்குத் தொடர்ந்தது பொதுநலனில் அக்கறை கொண்டவர்கள் அல்ல... மாறாக தனியார் கட்டுமான நிறுவனம் தான். இத்தகைய வழக்குத் தொடரப்பட்டதன் பின்னணி என்ன? என்பதைக் கூட ஆராயாமல் அடித்தட்டு மக்களின் வீடுகளை இடிக்க தமிழக அரசு துடிப்பது ஏன்?

ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகளை இடிக்கும் பணியை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை குடிசைகளில் இருந்து கோபுரங்களை நோக்கி மேற்கொள்ளாமல், கோபுரங்களில் இருந்து குடிசைகளை நோக்கி மேற்கொள்ள வேண்டும். பணக்காரர்களின் ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு, அதன் பின்னர் ஏழைகள் வீடுகளை அகற்றுவது குறித்து பரிசீலிக்கலாம். அப்போதும் கூட அவர்கள் வாழ்வதற்கான வாழ்விடங்களை அருகிலேயே அமைத்துத் தர வேண்டும்.

கண்ணையாவின் தீக்குளிப்புக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கோவிந்தசாமி நகர் மக்களின் வாழ்வுரிமையை காப்பதற்காக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த கண்ணையாவுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News