உள்ளூர் செய்திகள்
வைகோ

திருச்சி கள்ளிக்குடி காய்கனி வணிக வளாகத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்- வைகோ வேண்டுகோள்

Published On 2022-05-09 05:19 GMT   |   Update On 2022-05-09 05:19 GMT
திருச்சி புதிய பேருந்து நிலையத்தை விரைவில் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

திருச்சி மாநகருக்கு உள்ளே நிலவும் கடுமையான போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்ப்பதற்காகவும், எதிர்காலத்தில் மாநகரின் வளர்ச்சிக்காகவும், திருச்சி சென்னை நான்கு வழிச்சாலையில், மணிகண்டம் அருகில் 9.79 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்து, ஒருங்கிணைந்த மத்திய வணிக வளாகம் கட்டுவதற்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், 30.6.2014 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் ரூ.65 கோடி நிதி ஒதுக்கி, தரைத்தளம் 330 எண்கள், முதல் தளம் 500 எண்கள் என மொத்தம் 830 கடைகள் கட்டி முடிக்கப்பட்டன.

அதன்பிறகு, நகரின் மையப்பகுதியில் கடுமையான இட நெருக்கடியில் இயங்கி வருகின்ற காந்தி மார்க்கெட் வணிகர்களை, கள்ளிக்குடி வணிக வளாகத்திற்கு மாற்ற முடிவு செய்தபோது, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எங்களைக் கலந்து பேசாமல், திருச்சி மாநகரத்தை விட்டு விலகி வெகு தொலைவில் கட்டிய வணிக வளாகத்திற்குச் சென்று நாங்கள் வணிகம் செய்ய இயலாது எனக்கூறி, போராட்டங்கள் நடத்தினார்கள்; நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தார்கள்.

அரசின் முறையான அறிவிப்போ அல்லது வணிக வளாகத்திற்குச் சென்று வருவதற்கான பேருந்து வசதிகளோ செய்து தரப்படவில்லை என்பதால், அங்கே கடை வாடகைக்கு எடுத்தவர்களும் வணிகம் செய்ய முடியாமல் தடுமாறினார்கள். விற்பனை இல்லாமல், ஒரு சில மாதங்கள் வாடகை தந்தனர். அதன்பின்னர், அவர்களும் கடைகளைப் பூட்டி விட்டனர்.

தற்சமயம் இடமதிப்புடன் சேர்த்து ரூ.77 கோடி ரூபாய் அரசு செலவழித்து, உயர் தரமான கட்டிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில், கள்ளிக்குடி மத்திய வணிக வளாகம் செயல்படாமல் இருப்பது, மக்களிடையே வருத்தத்தை அளிக்கின்றது. திருச்சி மாநகரத்திற்கு உள்ளே நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி பெருகி வருகின்றது.

எனவே, கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்திற்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்; அரசு நிதி விரயம் ஆகாமல் தடுத்திட, பல்பொருள் வணிக வளாகம் அல்லது கோவை கொடீசியா வணிக வளாகம் போல மாற்றிட வேண்டும்; திருச்சி புதிய பேருந்து நிலையத்தையும் விரைவில் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News