உள்ளூர் செய்திகள்
பூண்டி ஏரி

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறப்பு- கிருஷ்ணா தண்ணீர் இன்று தமிழக எல்லைக்கு வந்தடைந்தது

Published On 2022-05-08 08:00 GMT   |   Update On 2022-05-08 08:00 GMT
கோடை வெயில் மற்றும் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் தமிழர்கள் தமிழகத்துக்கு 12 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

கடந்த செப்டம்பர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு பூண்டி முழுவதுமாக நிரம்பியது. இதனையடுத்து கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஜனவரியில் பெற வேண்டிய தண்ணீர் தரப்படவில்லை.

இந்த நிலையில் கோடை வெயில் மற்றும் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினார்.

அதனை ஏற்று கடந்த 5ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது அதன்பின்னர் தண்ணீர் திறப்பு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து அடைந்தது.

கிருஷ்ணா தண்ணீரை அமைச்சர் சா.மு.நாசர், கோவிந்த ராஜன் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

இந்தத் தண்ணீர் 25 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து பூண்டி ஏரிக்கு இன்று இரவு அல்லது நாளை காலை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 27.95 அடி ஆக பதிவாகியது. 1.310 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13. 222 டி.எம்.சி.ஆகும். தற்போது 7.666 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை நகர மக்களின் ஒரு மாத சராசரி குடிநீர் தேவை ஒரு டி.எம்.சி. ஆகும். தற்போது நிலுவையில் உள்ள தண்ணீரை கொண்டு இந்த வருடம் முழுவதும் சென்னையில் தட்டுப்பாடு இல்லாத குடிநீர் விநியோகம் செய்ய முடியும்.

தற்போது கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீரும் வந்து கொண்டிருப்பதால் அடுத்த வருடமும் தட்டுப்பாடின்றி சென்னையில் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News