உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கூடுதலாக தடையில்லா மின்சாரம் வழங்கப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2022-05-08 07:34 GMT   |   Update On 2022-05-08 07:34 GMT
பெரிய வேகத்தடைகளால் வாகனங்கள் செல்லமுடியாமல் திணறுகின்றன. புதிய ரோடு போட்டு, சாலை விதிப்படி வேகத்தடை அமைக்கவேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் கோட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., பண்டரிநாதன் தலைமை வகித்தார். வருவாய் கோட்ட அளவிலான தாசில்தார்கள், வேளாண், தோட்டக்கலை, பி.ஏ.பி., உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க முன்னாள் தலைவர் பொன்னுசாமி பேசுகையில், திருப்பூர் கோட்டத்தில் குறு, சிறு விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர். 

இவர்கள் குறு, சிறு விவசாயிகள் சான்று பெற, வி.ஏ.ஓ., ஆர்.ஐ., அலுவலகம், தாலுகா அலுவலகத்துக்கு அலையும் நிலை உள்ளது. எனவே இந்த சான்று பெற அந்தந்த தாலுகா அலுவலகங்களில் முகாம் நடத்தவேண்டும்.திருப்பூர் குமரன் ரோட்டிலிருந்து பிரியும் கோர்ட்டு வீதியில் டி.எம்.எப்., மருத்துவமனை வரை பல ஆண்டுகளாக ரோடு போடவில்லை. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

 பெரிய வேகத்தடைகளால் வாகனங்கள் செல்லமுடியாமல் திணறுகின்றன. புதிய ரோடு போட்டு, சாலை விதிப்படி வேகத்தடை அமைக்கவேண்டும். சந்திராபுரம் பிரிவிலிருந்து, செவந்தாம்பாளையத்தில் தாலுகா அலுவலகம் வரையிலான ரோடு மிக மோசமாக உள்ளது. இந்த ரோட்டில் தனியார் கேபிள் பதிக்க தோண்டப்பட்ட குழி மூடப்படவில்லை என்றார்.

ஊத்துக்குளி வட்டார  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ஊத்துக்குளி தாலுகா அலுவலகம், கொடியம்பாளையம் நால்ரோட்டிலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் உள்ளது. இந்த அலுவகத்துக்கு வந்து செல்ல பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் தவிக்கின்றனர். அவ்வழியே செல்லும் புறநகர் பஸ்களும், தாலுகா அலுவலகம் முன் நிற்பதில்லை. அப்பகுதியில் பஸ் நிறுத்தம் அறிவிப்பு வைக்கவேண்டும் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு துணை செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில்,அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கான குழாய் பதிக்கும் பணி நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விவசாய பயிர்களுக்கு தடையின்றி நீர் பாய்ச்சுவது கட்டாயமாகிறது. சேவூர் வட்டாரத்தில் இரவு 10 மணி முதல் 6 மணி, காலை 6 மணி முதல் 12 மணி வரை என 14 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.ஆனால் தற்போது, தினமும் 7 முதல் 8 மணி நேரம் மட்டுமே தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. 

இதனால், பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் கருகும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே, பழைய நடைமுறைப்படி கூடுதல் நேரம் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். காற்றுடன் கூடிய கன மழையால், நடுவச்சேரி, வேட்டுவபாளையம், ராமநாதபுரம், தெக்கலூர்  பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்துள்ளன. வாழை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார். 
Tags:    

Similar News