உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது

Published On 2022-05-07 09:47 GMT   |   Update On 2022-05-07 09:47 GMT
திருப்பூர் மாவட்டத்தில்12 முதல் 14 வயது வரை, 15 முதல் 18 வயது வரை இளம்சிறார்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21 லட்சத்து 83 ஆயிரத்து 700 பேர் உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நாளை 8-ந்தேதி மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அதிக இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது. கூடுதலாக, 2,500 பணியாளர், தன்னார்வலர்கள் களத்தில் இறங்க உள்ளனர்.
இது குறித்து கலெக்டர் வினீத்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில்12 முதல் 14 வயது வரை, 15 முதல் 18 வயது வரை இளம்சிறார்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21 லட்சத்து 83 ஆயிரத்து 700 பேர் உள்ளனர். இதுவரை 21 லட்சத்து16 ஆயிரத்து 103 பேருக்கு முதல் தவணையும், 16 லட்சத்து 06 ஆயிரத்து 908 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 65 ஆயிரத்து 597 பேருக்கு முதல் தவணையும், ஐந்து லட்சத்து 65 ஆயிரத்து 570 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. வருகிற 8-ந்தேதி 29வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடக்கவுள்ளது. ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு நபர் கூட விடுபடாமல் கிராமங்களிலும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இத்தடுப்பூசி கிடைத்திட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்த 5,262 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். 

இந்த நல்வாய்ப்பினை இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார். கடந்த முறை சுகாதார பணியாளர், தன்னார்வலர் உட்பட 2,564 பேர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். இது நடப்பு வார முகாமில் 5,362 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு ஒரு முகாம் என்ற நிலை மாறி தேர்தல் நடைபெறுவது போல் ஒவ்வொரு பள்ளியிலும் 3 அல்லது 4 முகாம் ஓட்டுச்சாவடிகளை போல் அமைக்கப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்துவோர் வரிசையில் காத்திருக்க கூடாது என்பதற்காக இந்த விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News