உள்ளூர் செய்திகள்
கொலை

கள்ளக்காதலுக்கு இடையூறு- கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி

Published On 2022-05-07 07:34 GMT   |   Update On 2022-05-07 07:34 GMT
தனிப்படையினர் விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் கோபாலை அவரது மனைவி சுசீலா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் வாலிபரை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கொடைக்கானலை சேர்ந்த ராமநாதன் மகன் கோபால் (வயது 35) என்பதும், கடந்த 10 வருடங்களாக பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் மனைவி சுசீலா மற்றும் 10 வயதான மகன் மற்றும் 7 வயதான மகளுடன் வசித்து வந்துள்ளார்.

கோபாலை கொன்ற கொலையாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பல்லடம் கோபாலகிருஷ்ணன், காமநாயக்கன்பாளையம் ரவி மற்றும் அவிநாசி பாளையம் மணிகண்டன், மங்கலம் ராஜவேல் மற்றும் உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர்.

தனிப்படையினர் விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் கோபாலை அவரது மனைவி சுசீலா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சுசீலாவை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சுசீலாவுக்கும் பல்லடம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதையறிந்த கோபால் மனைவி மற்றும் மாரீஸ்வரனை எச்சரித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கோபாலை கொலை செய்ய சுசீலாவும், மாரீஸ்வரனும் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி மாரீஸ்வரன் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த மதன்குமார், மணிகண்டன் மற்றும் கூலிப்படையினர் வினோத், லோகேஸ்வரன், விஜய் ஆகியோருடன் கோபாலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று கோபால் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது அவரை வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்று விட்டனர்.

பின்னர் குளித்தலை மற்றும் அருள்புரம் பகுதியில் பதுங்கியிருந்த 6பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
Tags:    

Similar News