உள்ளூர் செய்திகள்
சசிகலா

ஜெயலலிதா போல் ஆட்சி செய்ய விரும்புகிறேன்- திருச்செந்தூரில் சசிகலா பேட்டி

Published On 2022-05-07 05:42 GMT   |   Update On 2022-05-07 05:45 GMT
போலீஸ் நிலையங்களில் தி.மு.க.வினரால் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்று வருவதால் மக்கள் யாரும் நிம்மதியாக இருக்க முடியவில்லை என சசிகலா கூறியுள்ளார்.
திருச்செந்தூர்:

சசிகலா கடந்த சில நாட்களாக ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தற்போது தென்மாவட்டங்களில் மீண்டும் ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா அ.தி.மு.க. கட்சி கொடி கட்டிய காரில் நேற்று இரவு திருச்செந்தூருக்கு வந்தார். பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஸ்வரூப தீபாராதனை தரிசனம் செய்ய வந்த அவர் கையில் 5 அடி உயர வெண்கல வேலுடன் கோவிலுக்குள் சென்று மூலவர் சன்னதியில் விஸ்வரூப தரிசனம் செய்தார்.

தொடர்ந்து பஞ்சலிங்கம், சண்முகர் சன்னதியில் தரிசனம் செய்த அவர், வேலுடன் வள்ளி குகைக்கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து 5 அடி உயர வெண்கல வேலினை கோவிலிலுக்கு காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னர் சசிகலா அங்குள்ள ஓட்டலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒரு வேண்டுதல் காரணமாகவே வேல் காணிக்கை செலுத்தினேன். விரைவில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்திப்பேன் என்றார். தொடர்ந்து அ.தி.மு.கவை கைப்பற்றுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அ.தி.மு.க.வில் தான் இருப்பதாகவும், எங்கள் கட்சி அ.தி.மு.க. என்றும் தெரிவித்தார்.

அ.தி.மு.க. தலைவர்கள் தன்னை விமர்சிப்பதற்கு பதில் கூறிய அவர், தொண்டர்கள் தான் தலைவர் ஆகிறார்கள் என பதிலளித்தார். தொடர்ந்து தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி குறித்து பேசிய சசிகலா, இந்த ஓராண்டு கால ஆட்சியில் தி.மு.க. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

தமிழகத்தில் பெண்களுக்கு இரவில் பாதுகாப்பு இல்லை. இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் தனியே செல்ல முடியவில்லை. இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போலீஸ் நிலையங்களில் தி.மு.க.வினரால் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்று வருவதால் மக்கள் யாரும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இதனால் தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சியில் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசு அதிகாரிகளும் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு செல்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.

இனி அரசு இதுபோல் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சியில் எந்த குறையும் இருந்தது கிடையாது. அதேபோன்று ஆட்சியை கொடுக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News