உள்ளூர் செய்திகள்
வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீருக்கு பூத்தூவிய அதிகாரிகள்

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாசனத்திற்கு திறப்பு

Update: 2022-05-06 07:50 GMT
புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாசனத்திற்கு திறக்கப்பட்டது.
வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஆனைமடுவு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, நேரடி ஆற்றுப்பாசன பழைய ஆயக்கட்டு மற்றும் அணை வாயக்கால் பாசன புதிய ஆயக்கட்டு விவசாயிகளும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.  

அதன்படி சேலம் மாவட்ட  கலெக்டர் .கார்மேகம் உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சேலம் சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன் தலைமையில், ஆத்துார் உதவி செயற்பொறியாளர் கவிதாராணி, ஆனைமடுவு அணை உதவி பொறியாளர் விஜயராகவன் மற்றும் விவசாய சங்க பிரதிநிகள் முன்னிலையில், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து இன்று  காலை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் தொடர்ந்து 12 நாட்களுக்கு, வினாடிக்கு 60 கனஅடி வீதமும், வரும் மே 27-ந் தேதி முதல் தொடர்ந்து 9 நாட்களுக்கு முதல் வினாடிக்கு 60 கன அடி, வீதம் ஆறு மட்டும் ஏரி பாசனத்திற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும், தொடர்ந்து 12 நாட்களுக்கு வசிஷ்டநதியில் தண்ணீர் திறக்கவும், அணை வலது மற்றும் இடது வாய்க்கால் பாசனத்திற்கு 27ந்‌ தேதியிலிருந்து 11 நாட்களுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதமும், இதனைத்தொடர்ந்து ஜூன் 15-ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படும்.

கத்திரி வெயிலில் வாடிவரும், நீண்டகால பலன் தரும் பாக்கு, தென்னை மற்றும் வாழை உள்ளிட்ட மரப்பயிர்களுக்கும், ஆண்டுகால மற்றும் குறுகிய காலப் பயிர்களுக்கும் பாசனத்திற்கு வழிவகை கிடைத்துள்ளதால், ஆனைமடுவு அணை பாசன வசதி பெறும் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News