உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மறு முத்திரையிடாத தராசுகளை பயன்படுத்தினால் அபராதம் தொழிலாளர் துறை அதிகாரி எச்சரிக்கை

Published On 2022-05-06 04:36 GMT   |   Update On 2022-05-06 04:36 GMT
உடுமலை, பல்லடம், திருப்பூர் என பல பகுதிகளில் காய்கறி மார்க்கெட், நடைபாதை கடைகளில் சரியான எடையில் பொருட்களை விற்பனை செய்வது கிடையாது என புகார் எழுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், டோர் டெலிவரி செய்யும் கடைகள், பலசரக்கு கடைகளுக்கு உற்பத்தி நிறுவனங்கள் பொருட்களை சரியான எடைகளில் பேக்கிங் செய்து காலாவதி தேதி விபரங்களுடன் அனுப்பப்படுகின்றன.

அதில்பொருட்களின் மீது குறிப்பிட்டுள்ள அளவுகளில்பெருமளவு குறை ஏற்படுவது கிடையாது. ஆனால் உடுமலை, பல்லடம், திருப்பூர் என பல பகுதிகளில் காய்கறி மார்க்கெட், நடைபாதை கடைகளில் சரியான எடையில் பொருட்களை விற்பனை செய்வது கிடையாது என புகார் எழுகிறது.

அவர்கள் பயன்படுத்தும் தராசு, படிகள், எடைக்கற்கள் சரியான அளவு உள்ளதா என்பதற்கான முத்திரையும் இருப்பதில்லை. இதேபோல், இறைச்சிக்கடைகள், பழக்கடைகளிலும் சரியான எடைக்கற்கள் இன்றி வியாபாரம் செய்யப்படுகிறது.

இந்நிலையில்திருப்பூர், காங்கயம் பகுதிகளில் ஆய்வு நடத்திய தொழிலாளர் துறை அதிகாரிகள் மறுமுத்திரையிடாத 131 மின்னணு தராசுகள், 20 மேஜை தராசுகள், இரண்டு விட்டதராசுகள், 26 இரும்பு எடைக்கற்கள் என 179 தராசுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து தொழிலாளர் (அமலாக்கம்) உதவி கமிஷனர் மலர்க்கொடி கூறியதாவது:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து சந்தைகள், மார்க்கெட்டுகள், பஸ்  நிலையங்கள், தெருவோர வியாபார பகுதிகளில் அடிக்கடி ஆய்வு நடத்தப்படும். வணிகர்கள், தாங்கள் பயன்படுத்தும் எடை கருவிகளை குறிப்பிட்ட இடைவெளியில், மறு முத்திரையிட்டு மறு முத்திரை சான்று பெற்று  பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும்.

வணிகர்கள் முத்திரை சான்றை, மக்கள் பார்வைக்கு வைக்காவிட்டாலும் உரிய காலத்திற்குள் மறு முத்திரையிடாமல் இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News