உள்ளூர் செய்திகள்
மரணம்

ஆவடி அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி

Update: 2022-05-05 08:56 GMT
ஆவடி அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை:

ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு அசோக் நிரஞ்சன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆவடியை சேர்ந்த தொழிலாளர்கள் முத்து (வயது40), குணசேகரன் (27) ஆகியோர் இன்று காலை வந்தனர்.

அவர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி பணி செய்து கொண்டிருந்தபோது விஷவாயு அவர்களை தாக்கியது. இதில் இருவரும் உள்ளேயே மயங்கி விழுந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே தொழிலாளி முத்து பரிதாபமாக இறந்தார்.

குணசேகர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News