உள்ளூர் செய்திகள்
கொடநாடு எஸ்டேட்

கொடநாடு வழக்கில் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?- தனிப்படை போலீசார் தீவிரம்

Update: 2022-05-05 06:16 GMT
ஜெயலலிதாவின் உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றனிடம் ஏற்கனவே 2 முறை போலீசார் விசாரித்து இருந்தனர். நேற்று 3-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உட்படுத்தினர்.
கோவை:

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே 220-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவின் உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றனிடம் ஏற்கனவே 2 முறை போலீசார் விசாரித்து இருந்தனர். நேற்று 3-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உட்படுத்தினர்.

கொடநாடு பங்களாவுக்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் யார், அங்கு என்னென்ன ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் என்பது பற்றி விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடநாடு பங்களாவில் இருந்தது தானா? என்பது பற்றியும் அவரிடம் போலீசார் விசாரித்தனர்.

இந்தநிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள பிஜின்குட்டியின் சகோதரர் மோசசிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. மோசஸ் இன்று காலை கோவை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

கைதான பிஜின்குட்டி, கொடநாடு கொள்ளை தொடர்பாக ஏதாவது தகவல் தெரிவித்துள்ளாரா, அவருடன் நெருக்கமானவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்.

இந்த வழக்கில் தினந்தோறும் புதிய, புதிய நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது பரபரப்பை மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தனிப்படை போலீசார் எதை நோக்கி காய்களை நகர்த்தி வருகிறார்கள் என்பதும் சஸ்பென்சாகவே உள்ளது.

மேலும் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. அதன்பிறகே விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News