உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கரும்பு சாகுபடிக்கு புதிய தொழில்நுட்பம் - உடுமலை விவசாயிகள் வலியுறுத்தல்

Update: 2022-05-05 05:26 GMT
7 குள பாசன பகுதிகளில் ஆங்காங்கே குறைந்த பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.
உடுமலை:

உடுமலை ஏழு குள பாசன திட்டத்தின் கீழ் நேரடியாக 2,500 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதியில், கரும்பு சாகுபடியே பிரதானமாக இருந்தது. போடிபட்டி, பள்ளபாளையம் உள்ளிட்ட குளத்தின் நேரடி பாசன நிலங்கள் மட்டுமல்லாது சுற்றுப்பகுதி கிராமங்களிலும், கரும்பு பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

இங்கு உற்பத்தியாகும் கரும்பு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், வெல்லம் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட்டது. வெல்லம் உற்பத்தி ஆலை மற்றும் அதற்கான உபகரணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளால்  நேரடியாகவும், மறை முகமாகவும் கிராமப்புற தொழிலாளர்கள் அதிக அளவு வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். பிரதானமாக இருந்த கரும்பு சாகுபடி பிற பகுதிகளில் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.

7 குள பாசன பகுதிகளில்  ஆங்காங்கே குறைந்த பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர்.

கரும்பு சாகுபடியை விவசாயிகள் கைவிட, மகசூல் பாதிப்பு, நிலையான விலை கிடைக்காதது ஆகிய பிரச்சினைகள் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இச்சாகுபடிக்கான புதிய தொழில்நுட்பங்கள் எதுவும் உடுமலை பகுதியில், முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. சீதோஷ்ண நிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, மண் வளம் ஆகியவற்றுக்கு ஏற்ப இப்பகுதியில் புதிய கரும்பு ரகங்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை.

மகசூலை அதிகரித்தல், நீர் மேலாண்மைக்கான கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இப்பகுதி பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இதனால்ஆ ண்டு தோறும் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

இது குறித்து கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ள முன்னோடி விவசாயிகள் கூறியதாவது:-

உடுமலை பகுதியில் பெரும்பாலும், கரணை நடவு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. இம்முறையில், ஏக்கருக்கு 4 டன் விதைக்கரும்பு தேவைப்படுகிறது. நடவுக்கு மட்டும் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. 

ஆனால் பிற பகுதிகளில் கோவை கரும்பு இனப்பெருக்கு ஆராய்ச்சி நிறுவனத்தின், வழிகாட்டுதல்படி நுனிக்குருத்து திசு வளர்ப்பு நாற்று நடவு முறையை பின்பற்றுகின்றனர். இதில் நடவு செலவு குறைவதுடன் மகசூலும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக பிற பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதே போல்  கரும்புக்கு நேரடியாக தண்ணீர் பாய்ச்சும் முறையே இப்பகுதியில் பின்பற்றப்படுகிறது. சீதோஷ்ண நிலை மாற்றங்களுக்கேற்ப நீர் மேலாண்மையை பின்பற்ற முடிவதில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வாக மண் ஈரப்பதம் காட்டி எனப்படும் எளிய உபகரணத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். 

உபகரணத்தை பயன்படுத்தி கரும்புக்கு தேவையான போது நீர் பாய்ச்சலாம். இவ்வாறு பல புதிய தொழில்நுட்பங்கள் கரும்பு சாகுபடிக்காக அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவை இப்பகுதியை எட்டவில்லை. எனவே வேளாண்துறை வாயிலாக இத்தொழில்நுட்பங்கள் குறித்து உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மானியத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

வேளாண்துறையின் கீழ் செயல்பட்ட கரும்பு ஒட்டுண்ணி மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருதல் அவசியமாகும். கரும்பு மகசூல் கூடுதலாகி நிலையான விலை கிடைத்தால், மீண்டும் சாகுபடி பரப்பு அதிகரிக்கும். சர்க்கரை உற்பத்திக்கும் போதுமான கரும்பு கிடைக்கும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இவ்வாறு  விவசாயிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News