உள்ளூர் செய்திகள்
பூண்டி ஏரி

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் அடுத்தவாரம் திறப்பு- அதிகாரிகள் தகவல்

Update: 2022-05-04 06:56 GMT
அடுத்த வாரம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.

இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதனையடுத்து கண்டலேறு அணையில் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

தற்போது கோடை வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும்.

தற்போது 7.836 டி.எம்.சி. தண்ணீர்தான் இருப்பு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர்.

அடுத்த வாரம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதை அடுத்து பூண்டி ஏரியில் உள்ள தண்ணீர் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 1.497 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News