உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மது குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்: கோடை காலத்தை சமாளிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை

Published On 2022-05-04 06:04 GMT   |   Update On 2022-05-04 08:20 GMT
வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது.

பகல் நேரத்தில் வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் இரவில் கடுமையான புழுக்கம் நிலவுகிறது. இதனால் பலர் தூக்கத்தை தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கோடை காலத்தில் வெயிலை உக்கிரமாக மாற்றும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார். தாகம் இல்லாவிட்டாலும் அதிக தண்ணீரை குடியுங்கள் என்று கூறியிருக்கும் மா.சுப்பிரமணியன் மது குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆம்லேட் போடும் அளவுக்கு வெயில் அதிகமாக இருப்பதால் வாகனங்களின் சீட்டில் துணியை போட்டு வையுங்கள்.

பிற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை அவசியம் இல்லாமல் மக்கள் வெயில் வருவதை தவிர்க்க வேண்டும். பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.

கோடை காலத்தில் உடல் நலன் பாதிக்கப்படும் என்பதால் மது பிரியர்கள் சிறிது காலம் மது குடிப்பதை குறைத்துக் கொள்ளும் வகையில் தியாகம் செய்ய வேண்டும். கோடை காலம் முடியும் வரை வெளியில் செல்லும் போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் போதிய அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.



பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை விடுவது தொடர்பாக பள்ளி கல்வித்துறையினர் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடுவார்கள்.

தமிழகத்தில் வேலூர், மதுரை, கரூர், சென்னை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேலாக வெப்பம் பதிவாகி கொண்டிருக்கிறது. இது பொதுமக்களை வெகுவாக பாதிக்கும்.

இளநீர், எலுமிச்சை சாறு, மோர், பழச்சாறு போன்றவைகளை பொதுமக்கள் அருந்த வேண்டும். நீர்சத்து பழ வகைகளை போதுமான அளவுக்கு உட்கொள்ள வேண்டும்.

நாம் உடுத்தும் ஆடைகள் முழு உடலையும் மறைக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.வெளியில் பயணிக்கும் போது தொப்பி அணிவது நல்லது. செருப்பு இல்லாமல் நடக்க வேண்டாம்.

தேனீர், காபி போன்றவற்றை அதிகம் அருந்துவதை தவிர்க்க வேண்டும். புரதசத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட வேண்டும். வருகிற 8ந் தேதி 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.

இதுவரை 27 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு மா.சுப்பிர மணியன் கூறினார்.

முன்னதாக சென்னை அபிராமபுரம் பள்ளியில் கோடை கால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வேலு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News