உள்ளூர் செய்திகள்
அபராதம்

மழைநீர் கால்வாயில் கழிவுநீரை விட்டால் வீடுகள், வணிக வளாகங்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம்

Published On 2022-04-27 08:33 GMT   |   Update On 2022-04-27 08:33 GMT
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய பொறியாளருடன் ஒருங்கிணைந்து முறையான இணைப்பை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சியில் 387 கி.மீ. நீளத்திற்கு பேருந்து சாலைகள் மற்றும் 5,524 கி.மீ. நீளத்திற்கு உட்புறச் சாலைகள் உள்ளன. இதில் 2,071 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் உள்ளது.

மாநகரில் உள்ள 17 லட்சம் குடியிருப்புகளில் சில வீடுகள் மற்றும் வணிக வளாகம் மற்றும் உணவு விடுதிகள் கழிவுநீர் இணைப்பு பெறாமல் முறையற்ற வகையில் சட்டத்திற்கு புறம்பாக மழைநீர் செல்லக்கூடிய மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்புகளை இணைத்துள்ளனர். இதனால், மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் மழைநீர் செல்வது பெரிதும் பாதிக்கப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் ஏதேனும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளதா என்பதை கண்காணித்து அவற்றை உடனடியாக அகற்றிட மாநகராட்சி உதவி/இளநிலைப் பொறியாளர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் மற்றும் சாலைப் பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது, தங்களது வார்டுகளில் தினமும் பிரத்யேகமாக ஒரு மணி நேரம் மழைநீர் வடிகால்களில் ஏதேனும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டு, முறையற்ற கழிவுநீர் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை அன்றே உடனடியாக அகற்றிட வேண்டும்.

இக்குழுவின் சார்பில் மேற்கொள்ளப்படும் களஆய்வுகளில் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால் சாதாரணக் கட்டிடங்களில் குடியிருப்புகளுக்கு ரூ.5,000மும், வணிக வளாகங்களுக்கு ரூ.10,000மும், சிறப்பு கட்டிடங்களில் குடியிருப்புகளுக்கு ரூ.25,000மும், வணிக வளாகங்களுக்கு ரூ.50,000மும், அடுக்குமாடி கட்டிடங்களில் குடியிருப்புகளுக்கு ரூ.1 லட்சமும், வணிக வளாகங்களுக்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், இக்குழுவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முறையற்ற கழிவுநீர் இணைப்புகள் அடைக்கப்பட்டு, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய பொறியாளருடன் ஒருங்கிணைந்து முறையான இணைப்பை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News