உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

குற்றாலம் பேரூராட்சியில் 29-ந் தேதி மேல் முறையீடு குழு தேர்தல்

Published On 2022-04-22 07:28 GMT   |   Update On 2022-04-22 07:28 GMT
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் 29-ந் தேதி மேல் முறையீடு குழு தேர்தல் நடைபெற உள்ளது.
தென்காசி:

தென்காசி மாவட்டம்  குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 8 உறுப்பினர்களில் தி.மு.க. 4, அ.தி.மு.க. 4 உறுப்பினர்கள் என சமபலத்துடன் உள்ளனர். இவர்களில் குற்றாலம் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் கே.பி.குமார் பாண்டியன், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கணேஷ் தாமோதரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த  மார்ச் 4-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட  தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை தி.மு.க.வினர் புறக்கணித்ததால் அப்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மார்ச்  26-ந் தேதி மீண்டும்  குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பேரூராட்சி கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் (கலால்) துணை ஆணையர் ராஜமனோகர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் துணை கலெக்டர் ஷீலா, பேரூராட்சியின் செயல் அலுவலர் மாணிக்கராஜ் ஆகியோர் தேர்தலை நடத்த 9.30 மணி முதல் காத்திருந்தனர்.

இந்நிலையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் முன்னாள் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் எம்.கணேஷ் தாமோதரன் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள்  தங்கப்பாண்டியன், மாரியம்மாள், ஜெயா ஆகிய  4 பேர் மட்டுமே கூட்ட அரங்கிற்கு வந்து இருந்தனர்.

தி.மு.க. உறுப்பினர்களான முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் கே.பி.குமார் பாண்டியன், கிருஷ்ணராஜா, கோகிலா, ஸ்ரீ கீதா குமாரி ஆகிய 4 பேர்களும்  இம்முறையும் தேர்தலில் கலந்து கொள்ளாமல்  புறக்கணிப்பு செய்தனர்.

இதனால் மீண்டும் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குற்றாலம் பேரூராட்சியில்  வருகிற 29 -ந்  தேதி நடைபெறவுள்ள மேல்முறையீடு குழு தேர்தலில் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு பதவிகளை கொடுக்கவும் அதன் மூலம் இரு தரப்பும் சமாதானமாகி தேர்தலை நடத்துவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாகம் தெரிகிறது.

இதனால் வரும் 29-ந் தேதி மேல்முறையீடு குழு தேர்தல் சுமூகமாக நடைபெற்றால் அதனைத் தொடர்ந்து குற்றாலம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலும் சுமூகமாக முடிவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலமாகும்.  அதற்கு முன்பாக குற்றாலம் மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி, உள்ளிட்ட அருவிப் பகுதிகள் மட்டுமன்றி பேரூராட்சி தங்கும் அறைகள், சுற்றுச்சூழல் பூங்கா, நீச்சல் குளம் உள்ளிட்ட பகுதிகளை சீரமைக்கவும்,

குற்றாலம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை செய்வதற்கு ஏற்றவகையில் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், குற்றாலம் வர்த்தக சங்க நிர்வாகிகள், மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

குற்றாலம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரு கட்சிகளும் தலா நான்கு உறுப்பினர்களை சமமாக வைத்திருப்பதால் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பதை அரசியல் கட்சியினரால் கணிக்க முடியவில்லை.
Tags:    

Similar News