உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா சுப்பிரமணியன்

கொரோனாவை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2022-04-20 06:05 GMT   |   Update On 2022-04-20 06:05 GMT
பொதுமக்கள் தங்களின் உயிர் மீது அக்கறை, ஆசை இருந்தால் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை:

சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் புதுப்பிக்கப்பட்ட தொழிலாளர் ஓய்வு அறையை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தொற்று உலக அளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்பதில் இருந்து தான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர், மால்கள் போன்ற இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்.

கடந்த 1 மாதமாக கொரானா பாதிப்பு 50-க்கும் கீழாக குறைந்து இறப்பு விகிதம் பூஜ்ஜியம் ஆக உள்ளது. மருத்துவமனைகளில் 1, 2 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

200 பேர் என்ற அளவில் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் பதட்டமான சூழ்நிலை இல்லை. ஆனால் அதே நேரத்தில் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

முகக்கவசம் அணியக்கூடாது என்று கூறப்படவில்லை. சமூக இடைவெளி, கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்களின் உயிர் மீது அக்கறை, ஆசை இருந்தால் முகக்கவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில்,

முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி போக்குவரத்து தொழிலாளர்கள் அகவிலைப்படி உயர்வு பற்றி முடிவு எடுக்கப்படும். புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

விழாவில் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் கோபால், நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம், கவுன்சிலர்கள் துரைராஜ், கிருஷ்ணா, மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News