சென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழலுக்கு 224 கனஅடி தண்ணீர் திறப்பு
செங்குன்றம்:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரிகளில் 8 ஆயிரத்து 141 மி. கனஅடி தண்ணீர் (8.1டி. எம்.சி) இருக்கிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி. கனஅடி ஆகும். இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பப்படு அங்கிருந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியதையடுத்து தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 20-ந்தேதி முதல் சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஏரியில் உள்ள 9 ஷட்டர்களில் 3 ஷட்டர்கள் திறக்கப்பட்டு பேபி கால்வாய் மூலம் தண்ணீர் சென்றுகொண்டு இருக்கிறது. இன்று சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 224 கனஅடி தண்ணீர் சென்றுகொண்டு இருக்கிறது. இதுவரை 0.44 டி.எம்.சி. தண்ணீர் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி. கனஅடி. இதில் 1867 மி. கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 63 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி. கனஅடி. இதில் 2894 மி. கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து 215 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி. கனஅடி. இதில் 2568 மி. கனஅடி தண்ணீர் இருக்கிறது. 154 கனஅடி நீர் வெளியேற்றப் படுகிறது.
கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 481 மி. கனஅடி தண்ணீர் (மொத்த கொள்ளளவு 500 மி. கனஅடி) உள்ளது.
தற்போது குடிநீர் ஏரிகளில் உள்ள தண்ணீரை வைத்து சென்னையில் இந்த ஆண்டு முழுவதும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.