உள்ளூர் செய்திகள்
ஆசிரியர்

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர் போராட்டம் நடத்த முடிவு

Update: 2022-04-17 09:19 GMT
அகவிலைப்படியை உயர்த்தி வழங்க கோரி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை:

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை காலவரையின்றி முடக்கி வைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதையும், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு இதுவரை அறிவிக்காததையும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும் எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்புச் செய்து பணமாக்கும் உரிமை நிறுத்தி வைக்கப்பட்டது.

2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை தி.மு.க அரசு வழங்கும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்த நிலையில் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்புச் செய்யும் உரிமையைத் தமிழக அரசு மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்து ஆணை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 1.1.2022 அகவிலைப்படி உயர்வை அறிவித்து விட்ட நிலையில் அது பற்றியும் தமிழக அரசு இதுவரை அறிவிக்காததும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை இன்றைய அரசு மீண்டும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அரசும் உரிமைப் பறிப்பை ஒவ்வொன்றாக நடத்திக் கொண்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சரிசெய்தல், ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசிய தி.மு.க அரசு அது பற்றி எவ்வித சிந்தனையும் இல்லாமல் இருப்பதும், ஏற்கனவே இருந்த உரிமைகளை நிரந்தரமாக பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகும்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை விரிவாக விவாதித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மைய நிர்வாகிகள் கூட்டம், தமிழக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மாநில செயற்குழு முடிவின்படி மாநிலந்தழுவிய தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News