உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மடத்துக்குளத்தில்ஒருங்கிணைந்த சந்தை வளாகம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Update: 2022-04-16 07:50 GMT
தற்போது வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகம் அருகில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில் தக்காளி, கத்தரி, வெண்டை, பீட்ரூட், பச்சை மிளகாய், சின்னவெங்காயம் என பல்வேறு காய்கறி சாகுபடி அதிக அளவு உள்ளது. 

இப்பகுதி விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய உடுமலை, கணியூர், பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சந்தைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

தாலுகா தலைநகராக உள்ள மடத்துக்குளம் சுற்றுப்பகுதியிலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமமக்களும் காய்கறி வாங்க பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

தற்போது வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகம் அருகில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. சந்தைக்கான எந்த அடிப்படை வசதியும் இல்லாமல், குறுகிய இடத்தில், தற்காலிக கூரை அமைந்த கடைகளில், வியாபாரம் செய்கின்றனர். 

மேலும், இடமில்லாமல் பேரூராட்சி அலுவலகம் முன் தேசிய நெடுஞ்சாலை, போலீஸ் நிலையம் என வாகன போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில், அபாய முறையில், கடைகள் அமைத்து காய்கறி விற்பனை செய்கின்றனர்.

நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கும், கடைகளுக்கும் இடையே காய்கறி வாங்க வருபவர்கள் நிற்பதுடன் அவர்களது வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால் சந்தை நாளில் தேசிய நெடுஞ்சாலையில்  போக்குவரத்து பாதிப்பது தொடர்கதையாக உள்ளது. 

எனவே வாரச்சந்தையை இடம் மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. 

மடத்துக்குளம் தாலுகாவாக 2009-ல் தரம் உயர்த்தப்பட்ட பிறகு பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

தற்போது தாலுகாவுக்கு ஒரு உழவர் சந்தை என அரசு அறிவித்துள்ள நிலையில்  மடத்துக்குளம் தாலுகாவில் மேலும் ஒரு உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் தற்போது நடத்தப்படும் வாரச்சந்தையை இடம் மாற்றி அதிக பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த சந்தை வளாகம் அமைக்க வேண்டும். அங்கு விவசாயிகள் விளைபொருட்களை தினசரி விற்பனை செய்ய விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 

இரு சந்தையும் ஒரே வளாகத்தில் இருக்குமாறு பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அப்புதிய சந்தை வளாகத்தில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News