உள்ளூர் செய்திகள்
தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோவில் தேரோட்டம்

Update: 2022-04-14 08:41 GMT
புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர்.
ராசிபுரம்:

ராசிபுரம் அருகே புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இதையொட்டி தினந்தோறும் ஒவ்வொரு சமூகத்தின் சார்பில் சாமி ஊர்வலம் நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற உருளுதண்டம் போட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. அம்மன் உற்சவர் சிலை தேரில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. 

பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளத்துடன் தேரோட்டம் தொடங்கியது.  தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 

காலையில் தேரடி நிலையத்தில் இருந்து புறப்பட்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலையில் கோவிலை வந்தடைந்தது. தேரோட்டத்தில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி நகைச்சுவை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற நீண்ட அலகுகுத்தி ஊர்வலமாக வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நந்தகுமார், ஆய்வாளர் ஜெயமணி, நிர்வாக பரம்பரை அறங்காவலர் ஈஸ்வரமூர்த்தி, பரம்பரை அறங்காவலர் ஞானவேல் லோகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

ஆங்கிலேயர் காலத்திலிருந்து இந்த கோவில் திருவிழாவின்போது சிறிய குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக முகாம் நீதிமன்றம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் முகாம் நீதிமன்றம் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரெஹனா பேகம் தலைமையில் நடந்தது. 

இதில் வக்கீல்கள் கலந்து கொண்டனர். முகாமில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, சந்துக்கடை போன்ற சிறிய வழக்குகள் உள்பட 70 வழக்குகளை விசாரித்து சுமார் ரூ.45 ஆயிரத்தை நீதிபதி ரெஹனா பேகம் அபராதமாக விதித்தார்.
Tags:    

Similar News