உள்ளூர் செய்திகள்
கொலை

ஆத்தூர் அருகே சொத்து பிரச்சினையில் பெண் கொலை

Update: 2022-04-11 05:09 GMT
ஆத்தூர் அருகே சொத்து பிரச்சினையில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 42). விவசாயி. இவரது முதல் மனைவி விஜயாவுக்கு குழந்தைகள் இல்லாததால் செல்வராணி (35) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுககு 15 வயதில் மகன் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பூர்வீக சொத்தான 7 ஏக்கரில் 2 ஏக்கர் நிலத்தை முதல் மனைவி விஜயா பெயரில் அசோகன் கிரயம் செய்தார். மீதம் உள்ள 5 ஏக்கர் நிலத்தை செல்வராணிக்கு எழுதி வைக்கப்போவதாக கூறி வந்தார்.

அதே நேரத்தில் அசோகனின் சகோதரி ராசாத்தியின் கணவரான விவசாயி சிவராஜ் என்பவர் பூர்வீக சொத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என கேட்டு வந்தார். இதுதொடர்பாக கடந்த 31-ந் தேதி அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து செல்வராணி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் வீடு திரும்பாத அவர் கடந்த 2-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் அங்குள்ள விவசாய தோட்டத்து கிணற்றில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் மற்றும் போலீசார் அவரது உடலைகைப்பற்றி விசாணை நடத்தினர்.அப்போது சடலமாக கிடந்தவர் மாயமான செல்வராணி என்பது தெரியவந்தது. நிர்வாண நிலையில் கை-கால்கள் கட்டப்பட்டு உடலில் கல்லை கட்டி கிணற்றில் அவரை வீசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே செல்வராணியின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது அண்ணன் ஆனந்தமுருகன் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர். செல்வராணியின் செல்போனுக்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில் அந்த எண்களை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் அசோகன் சகோதரியின் கணவர் சிவராஜ், வெள்ளையூர் வி.ஏ.ஓ. முத்தையன் முன்பு நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து அவர் வீரகனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்சினையில் தரக்குறைவாக பேசியதால் செல்வராணியை தாக்கி கல்லை கட்டி கிணற்றில் வீசி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான சிவராஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

பூர்வீக சொத்தில் எனது மனைவி ராசாத்திக்கு எதுவும் கொடுக்காமல் எனது மைத்துனர் அசோகன் 7 ஏக்கர் நிலத்தையும் அவரது 2 மனைவிகளுக்கும் எழுதி வைத்தார். இதுதொடர்பாக கடந்த 31-ந் தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டை விட்டு வெளியேறிய செல்வராணி இரவு நேரத்தில் தனியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை வழிமறித்து நியாயம் கேட்டதால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது என்னை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம் அடைந்த நான் கையில் இருந்த கட்டையால் அவரது தலையில் தாக்கினேன். இதில் மயங்கி விழுந்த அவர் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார். இதனால் பயந்துபோன நான், அவரது சேலை, ஜாக்கெட்டை கழற்றி கை, கால்களை கருங்கல்லால் கட்டி சரவணன் என்பவரின் விவசாய தோட்டத்து கிணற்றில் வீசி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டேன். போலீசார் என்னை நெருங்குவதை அறிந்து சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News