உள்ளூர் செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

சொத்து வரியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2022-04-02 05:39 GMT   |   Update On 2022-04-02 05:39 GMT
சொத்து வரி உயர்வு சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது. வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும் என்று அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் சொத்துவரி 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், மாநகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இது நியாயமற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, மருந்துகள் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சொத்து வரியும் உயர்த்தப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்த கூடாது.

சொத்துவரி உயர்வு சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது. வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு நகரப் பகுதிகளில் சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்; பொருளாதார சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News