உள்ளூர் செய்திகள்
முக கவசம்

சென்னையில் போலீஸ்காரர்களுக்கு 1.5 லட்சம் முகக்கவசங்கள்- 5 லட்சம் மாத்திரைகள் வினியோகம்

Published On 2022-03-20 09:30 GMT   |   Update On 2022-03-20 09:30 GMT
சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் உத்தரவின்பேரில், அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும், ஒலி பெருக்கிகள் மூலம் எச்சரிக்கைகள் விடுத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

சென்னை:

தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு, பொது மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது.

இக்காலகட்டத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றி, வாகனத் தணிக்கை, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பல்லாவரம் சரக உதவி ஆணையாளர் உட்பட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் தங்களது இன்னுயிர் துறந்தனர்.

ஆகவே, முன்கள பணியில் தொய்வின்றி பணியாற்றிய சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் சுமார் 24 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க கடந்த மே 2021 முதல் தற்போது வரையில் கொரோனா தடுப்பு உபகரணங்களான முகக்கவசங்கள், திரவ சுத்திகரிப்பான்கள், கையுறைகள், பாதுகாப்பு உடை கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும், சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் உத்தரவின்பேரில், அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும், ஒலி பெருக்கிகள் மூலம் எச்சரிக்கைகள் விடுத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முன்களப் பணியாளர்களாகிய சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் பாதுகாப்பை கருதி, மேலும் 1.5 லட்சம் முகக்கவசங்கள், 2 லட்சத்து 40 ஆயிரம் ஜிங்க் மாத்திரைகள், 2 லட்சத்து 40 ஆயிரம் மல்டி வைட்டமின் மாத்திரைகள் மற்றும் 48 ஆயிரம் கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News