உள்ளூர் செய்திகள்
தலித் இயக்கங்களின் கூட்டமைப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமாரிடம் ம

ஊரக வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி- தலித் கூட்டமைப்பு வலியுறுத்தல்

Published On 2022-03-19 11:00 IST   |   Update On 2022-03-19 11:00:00 IST
ஊரக வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி பெற வேண்டும் என தலித் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:

தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மூர்த்தி புதுவை குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சருக்கு  அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநில விவசாய தொழிலாளர்களின் வருமானத்துக்கு கைகொடுக்கும் ஒரே திட்டமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்டம் உள்ளது. இதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 100 நாள் குறையாமல் வேலை தர வேண்டும் என்பது சட்டம். 

ஆனால் புதுவையில்  கடந்த 5 ஆண்டில் ஆண்டுக்கு 10 நாட்கள் கூட வேலை வழங்கவில்லை. தமிழகத்தில் 150 நாட்களுக்கு மேல் வேலை தரப்படுகிறது.  

புதுவையில் இந்த ஆண்டு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்து சராசரியாக 14 நாட்கள் மட்டுமே வேலை அளித்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. 

சில கிராமங்களில் ஒரு நாள் கூட வேலை வழங்க வில்லை.  பதிவு செய்துள்ள 75 ஆயிரத்து 400 குடும்பங்களுக்கு 75 லட்சம் வேலை  நாட்கள் நிர்ணயித்து சுமார் ரூ.200 கோடி நிதி ஒதுக்கினால்தான் 100 நாட்கள் வேலை வழங்க முடியும். 

நடப்பு ஆண்டில் 8 லட்சம் வேலை நாட்களை முடிவு செய்து ரூ.12 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சரியானதல்ல. 

மத்திய அரசு இந்த ஆண்டு ரூ.98 ஆயிரம்  கோடியை ரூ.73 ஆயிரம் கோடியாக நிதி குறைப்பு செய்துள்ளது. புதுவை அரசு மத்திய அரசை அணுகி கூடுதலாக நிதி பெற வேண்டும்.  இல்லாவிட்டால் கடந்த ஆண்டு நிதியான ரூ.12 கோடியை விட குறைவாகவே நிதிஒதுக்கப்படும். 

எனவே மாநில அரசு மத்திய அரசை  அணுகி இத்திட்டத்துக்கு போதிய நிதி பெற வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Similar News