உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வனப்பகுதியில் வசித்தாலும் குடிநீரின்றி தவிக்கும் உடுமலை மலைவாழ் மக்கள்

Update: 2022-03-18 08:02 GMT
கோடை துவங்கியுள்ளதால் மலைவாழ் மக்கள் இணைந்து தங்களுக்கான குடிநீர் கொண்டு வர குழாய்கள் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
உடுமலை:

மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரக பகுதியில் ஈசல் திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ, 1,208 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை கிராமத்தில், மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியில்லாமலும், கோடை காலத்தில் குடிநீருக்கு மலை உச்சியிலுள்ள 4 கி.மீ., தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை உள்ளது. அரசு சார்பில் இங்கு குடிநீர் வசதி மேற்கொள்ளப்படாத நிலையில், கோடை துவங்கியுள்ளதால் மலைவாழ் மக்கள் இணைந்து தங்களுக்கான குடிநீர் கொண்டு வர குழாய்கள் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக மலை கிராம இளைஞர்கள், கரடு, முரடான வனப்பகுதியில் குழாய்களை தலை சுமையாகவும், தோளில் சுமந்து கொண்டும் செல்கின்றனர்.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது :

ஈசல் திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு முறையான பாதை வசதி இல்லை. அடர்ந்த வனப்பகுதியில் 8 கி.மீ., தூரம் நடந்து மருத்துவம், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைக்கு ஜல்லிபட்டி, லிங்கமாவூர் கிராமங்களுக்கு வந்து செல்கின்றனர். மலைவாழ் மக்கள் குடிநீருக்கு மழை காலத்தில் ஆங்காங்கே கிடைக்கும் மண் கலந்து வரும் அசுத்தமான நீரை வடிகட்டி பயன்படுத்த வேண்டியதுள்ளது.

அதிலும் நீர் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பிலிருந்து மலை உச்சியில் அமைந்துள்ள சிற்றாற்றில் நீர் கிடைக்கும். அதனை எடுத்து வர குடங்களுடன் மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும்.

தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் குடிநீருக்கு பல கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காண அங்கு தற்காலிக தடுப்பணை அமைத்து குழாய் வழியாக குடியிருப்புக்கு நீர் கொண்டு வர வேண்டும். 

நிரந்தர தீர்வு காண வனத்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் ஈசல் திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பில் சிறிய அளவிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், மலை உச்சியிலிருந்து குழாயும் அமைத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News