உள்ளூர் செய்திகள்
கைது

தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் திருடிய கும்பல் கைது

Update: 2022-03-18 07:16 GMT
தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் திருடிய கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து வந்தன. இதுகுறித்த புகார்கள் தொடர்ந்து வந்ததையடுத்து குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.

அதன்படி உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று தனிப்படை போலீசார் உசிலம்பட்டி பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள காட்டு பகுதியில் பதுங்கியிருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீசார் 3 பேரையும் விரட்டிப்பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு 3 பேரும் அழைத்துச் செல்லப்பட்டு கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.

இதில் அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித், காத்தபெருமாள், பவளபிரதீப் என தெரிய வந்தது. மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களான இவர்கள் தேனி, மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிளை திருடி வந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, சித்தார்கோட்டை, அவிநாசி ஆகிய பகுதிகளிலும் இந்த கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. ஆந்திரா, கேரளாவிலும் மோட்டார் சைக்கிளை திருடும் இந்த 3 பேர் அங்கிருந்து அதனை மதுரைக்கு கொண்டு வருவார்கள். இங்கு மெக்கானிக் ஒர்க்ஷாப் மற்றும் இரும்பு ஆலைக்கு கொண்டு சென்று மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத அளவுக்கு என்ஜின் மோட்டார் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேர் வசமிருந்த 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News