உள்ளூர் செய்திகள்
முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் (கோப்புப்படம்)

25-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது

Published On 2022-03-18 07:01 GMT   |   Update On 2022-03-18 07:01 GMT
முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு 2-வது தவணை தடுப்பூசி போடாமல் ஒரு கோடியே 34 லட்சத்து 32 ஆயிரத்து 862 பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணி கடந்த ஒரு வருடமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய ஆட்சி வந்த பின்னர் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மேலும் தீவிரப்படுத்தப்பட்டன.

இதுவரையில் 24 மெகா முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தோறும் நடத்தப்படும் முகாம்கள் மூலம் இதுவரை தடுப்பூசி போடாமல் இருப்பவர்களுக்கு செலுத்தப்படுகிறது.

இதுவரையில் 9 கோடியே 91 லட்சத்து 7 ஆயிரத்து 546 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் 1 கோடியே 81 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். முதல் தவணை தடுப்பூசி போடாமல் 46 லட்சத்து 67 ஆயிரத்து 999 பேர் உள்ளனர்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு 2-வது தவணை தடுப்பூசி போடாமல் ஒரு கோடியே 34 லட்சத்து 32 ஆயிரத்து 862 பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

2-வது தவணை தடுப்பூசி போடாமல் இருப்பவர்களை மையமாகக் கொண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. கொரோனா தொற்று பரவல் தற்போது தீவிரமாக இல்லை என்றாலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசி போட முன்வர வேண்டும்.

சென்னையில் மட்டும் 10 லட்சத்து 60 ஆயிரத்து 411 பேர் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். கோவையில் 7 லட்சத்து 86 ஆயிரத்து 893 பேரும், தஞ்சாவூரில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 119 பேரும், சேலத்தில் 5 லட்சத்து 77 ஆயிரத்து 569 பேரும், மதுரையில் 5 லட்சத்து 62 ஆயிரத்து 989 பேரும் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் 5,23,801, திருப்பூரில் 5,04,456, தூத்துக்குடியில் 5,04436, திருவண்ணாமலையில் 4,96,838 பேரும், கடலூரில் 4,71,578 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் 4,21,962 பேரும், கிருஷ்ணகிரியில் 4,09,169 பேரும், செங்கல்பட்டில் 4,07,570, திருவள்ளூரில் 4,04,862 பேரும், விழுப்புரத்தில் 3,81,791 பேரும், திண்டுக்கல்லில் 3,72,735 பேரும், ராமநாதபுரத்தில் 3,55,526 பேரும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

தடுப்பூசி போடாமல் இருந்து வரும் மக்கள் மெகா சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாளை (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் முகாம்கள் நடக்கின்றன.

இந்த முகாம்களில் எந்தெந்த வயது பிரிவினர் தடுப்பூசி போட விரும்பினாலும் போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போடுவதை தவிர்க்காமல் தகுதி உள்ள அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். அது தான் முழுமையான பாதுகாப்பை கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News