உள்ளூர் செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

Published On 2022-03-12 02:58 GMT   |   Update On 2022-03-12 02:58 GMT
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓ.பன்னீர்செல்வம் வருகிற 21-ந்தேதி நேரில் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் 2¾ ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது.

ஏற்கனவே 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட அப்பல்லோ டாக்டர்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்துவருகிறது.

ஏற்கனவே 90 சதவீத விசாரணை முடிவடைந்த நிலையில் தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஜெயலலிதா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டது முதல் அவரது இறுதி நாட்கள் வரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவருடன் இருந்த சசிகலா தனது தரப்பு விளக்கத்தை பிரமாண வாக்குமூலமாக ஏற்கனவே ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பெரும்பாலான நாட்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்தவர்களில் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவர் ஆவார்.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது அங்கிருந்த அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.

இந்த வரிசையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆஸ்பத்திரியில் சசிகலாவுடன் இருந்த அவரது அண்ணன் மனைவி இளவரசி ஆகியோரிடம் மட்டும் ஆணையம் விசாரணை மேற்கொள்ள வேண்டியது உள்ளது.

இவர்களிடம் விசாரணை நடத்தி முடித்துவிட்டால் ஆணையத்தின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிவிடும். இதை கருத்தில் கொண்டு ஓ.பன்னீர்செல்வம், இளவரசி ஆகியோர் வருகிற 21-ந் தேதி நேரில் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

அவர்கள் இருவரும் அன்றைய தினம் ஆணையத்தில் ஆஜராகும்பட்சத்தில் ஒரே நாளில் அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்து அன்றைய தினமே சசிகலா, அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணையை முடிக்கவும் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News