உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் போலந்தில் படிக்க விருப்பம்- மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக அமைச்சர் பேட்டி

Published On 2022-03-10 07:04 GMT   |   Update On 2022-03-10 07:04 GMT
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே லட்சியம், அதற்கு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள், நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை:

சென்னை சைதாப்பேட்டை, கொத்தவால் சாவடி தெரு, குடிசைமாற்று வாரிய பகுதியில், ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரே‌ஷன் கடை மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உக்ரைனில் இருந்து தமிழகம் வந்த 1,456 மாணவர்களுக்கு 20 மனநல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 753 பேரை தொடர்பு கொண்டதில் 375 மாணவர்கள் நேரடியாக உரையாற்றி உள்ளார்கள்.

மேலும் உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் போலந்து போன்ற நாடுகளில் படிப்பை தொடர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர், இது தொடர்பாக மத்திய அரசுக்கு வலியுறுத்த உள்ளோம்.

அதேபோல் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே லட்சியம், அதற்கு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள், நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள். சென்னை மாநகராட்சி பூங்கா துறை சார்பில் உடற்பயிற்சி கூடங்கள் பராமரிக்கப்படும்.

அதுமட்டுமின்றி தி.மு.க.வினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட காரணத்திற்காக கடந்த ஆட்சியில் காழ்ப்புணர்ச்சியுடன் அ.தி.மு.க.வினர் திமுக கட்டிய கட்டிடங்களை பராமரிக்கவில்லை. எனவே எந்த ஆட்சியில் கட்டப்பட்டிருத்தாலும், அவை பராமரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News