உள்ளூர் செய்திகள்
மணிமுத்தாறு அணை

மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Update: 2022-02-28 10:21 GMT
தொடர்ந்து மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால், மணிமுத்தாறு அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை மலை பகுதியில் நேற்று திடீரென்று கனமழை பெய்தது. களக்காடு அருகே உள்ள கொடுமுடியாறு அணை பகுதியிலும் நன்றாக மழை பெய்தது. கொடுமுடியாறு அணை பகுதியில் மட்டும் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மழை காரணமாக மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது மணிமுத்தாறு அணைக்கு ஒரு வினாடிக்கு சுமார் 40 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக இன்று காலை மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 161 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 475 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 103.15 அடியாக உள்ளது. தொடர்ந்து மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால், மணிமுத்தாறு அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரின் அளவு குறைந்த பிறகு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 383 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1,004 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 91.75 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 95.24 அடியாகவும் உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மற்ற பகுதிகளில் மழை எதுவும் பதிவாகவில்லை. ஆனால் சில நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தினசரி விடியற்காலை குளிர் காற்று வீசி வருகிறது.
Tags:    

Similar News