உள்ளூர் செய்திகள்
விழாவில் சாமி ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம்

ஏலகிரி மலையில் 14 கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு

Published On 2022-02-25 09:50 GMT   |   Update On 2022-02-25 09:50 GMT
ஏலகிரி மலையில் 14 கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
ஜோலார்பேட்டை:

 ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலையில் 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. 

இங்கு உள்ள மலைவாழ் மக்கள் ஆதிகாலம் முதல் பாரம்பரிய கலாசாரம் மாறாமல் ஒவ்வொரு கிராமத்திற்கும் அம்மன் கோவில் கட்டி ஒவ்வொரு கிராமத்திலும் விழா நடத்தி வருகின்றனர். 

இது மட்டுமல்லாமல்  இங்குள்ள மலைவாழ் மக்கள் குடும்ப கலாசாரங்கள் அனைத்தும் இன்றும் சடங்குகள், சம்பிரதாயங்களை பின்பற்றி வருகின்றனர். இதனால் இவர்கள் நடத்தும் விழாக்களில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் என ஏராளமானோர் பங்கேற்று மகிழ்வர். 

இவர்கள் நடத்தும் ஒவ்வொரு விழாக்களிலும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிலையில் இங்குள்ள மேட்டுக்கணியூர் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் சக்தி அம்மன் கோவில் அமைத்துள்ளனர். இந்த கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே திருவிழா நடக்கும். 

2 வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதம் முதல் வாரத்தில் இங்குள்ள மலைவாழ் மக்கள் சக்தி அம்மனுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விழா நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த வருடம் கடந்த 21-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் நாளன்று அம்மனுக்கு கொடியேற்றி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். 

இதனை அடுத்து 2-வது நாளான 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஊர் கிராமத்து மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். 3&வது நாளான நேற்று முன்தினம் 14 கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் 200&க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி நீண்ட வரிசையில் சென்று அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். 

பின்னர் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி அம்மனுக்கு பூஜை செய்து எருமை, ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு வழிபட்டனர்.

இதனையடுத்து விழாவிற்கு வந்த உறவினர்களை விருந்து வைத்து உற்சாகப்படுத்தினர். பின்னர் 3 நாட்களும் பகல் மற்றும் இரவு நேரங்களில் நையாண்டி தெருக்கூத்து பாட்டு கச்சேரி உள்ளிட்ட கிராமத்து பாரம்பரியம் மாறாத நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் வைத்து கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

இது போன்ற மலை வாழ் மக்களின் பாரம்பரியம் மாறாத கலாசார நிகழ்ச்சிகளை காண ஏலகிரி மலைக்கு சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்து தங்களது கேமராவில் நிகழ்ச்சிகளை பதிவு செய்து கொண்டனர். 

மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த அம்மன் திருவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News