உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

காலாவதியாகும் கொரோனா தடுப்பூசிகளை மாற்றிக்கொள்ளலாம்- சுகாதாரத்துறை அறிவிப்பு

Update: 2022-02-25 07:24 GMT
தனியார் மருத்துவமனைகளில் காலாவதியான கொரோனா தடுப்பூசிகள் இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளலாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இலக்கை எட்டி வருகிறது. இதுவரையில் 9 கோடியே 64 லட்சத்து 52 ஆயிரத்து 101 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

அனைத்து அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டாலும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்துடன் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரையில் தமிழகத்தில் தடுப்பூசி வீணாவதை தடுத்து சேமித்ததன் மூலம் 11 லட்சம் பேருக்கு கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் இந்த மாத இறுதியில் காலாவதி ஆவதாக மருத்துவ சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

பல லட்சம் மதிப்புள்ள கொரோனா தடுப்பூசிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தப்படாததால் வீணாகிறது. இதை கருத்தில் கொண்டு காலாவதி ஆகக்கூடிய தடுப்பூசிகளை அரசு பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக மாற்று தடுப்பூசிகளை கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் காலாவதியான தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளில் இருந்தால் அதனை கொடுத்துவிட்டு இன்று முதல் புதிய தடுப்பூசிகள் மாற்றிக் கொடுக்கப்படுகிறது. அதற்கு பதிலாக சுகாதாரத்துறையில் இருந்து மேலும் 6 மாத கால அவகாசம் உள்ள தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

தனியார் மருத்துவமனைகளில் காலாவதி ஆன தடுப்பூசிகள் இன்றுமுதல் அனைத்து மாவட்டங்களிலும் பெறப்படுகிறது. அதற்கு மாற்றாக அரசின் சார்பில் மேலும் 6 மாதத்திற்கு பயன்படுத்தக்கூடிய தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் இன்று தொடங்கியுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் அந்தந்த மாவட்ட சுகாதார துணை இயக்குனர்களை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News