உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை- மூணாறுக்கு கூடுதல் பஸ் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

Published On 2022-02-24 04:42 GMT   |   Update On 2022-02-24 04:42 GMT
உடுமலை-மூணாறு வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என இரு மாநில பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
உடுமலை:

உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மறையூர் 46 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மறையூர் பகுதி மக்கள் மருத்துவ சேவை உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் உடுமலை நகரில் நம்பியுள்ளனர்.

இதனால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இரு நகரங்களுக்கு இடையிலும் பயணித்து வருகின்றனர். தவிர மறையூர் வழித்தடத்தில் உடுமலை அமராவதி மறையூர் வனசரகம் அமைந்துள்ளது. கோடந்தூர், சம்ப காடு, தளிஞ்சி உட்பட மலைவாழ் கிராம மக்களும் இந்த வழித்தடத்தையே அதிகம் நம்பி உள்ளனர்.

உடுமலையிலிருந்து மறையூர் வழியாக மூணாறுக்கு கேரள போக்குவரத்து துறை சார்பில் நான்கு முறையும் தமிழக அரசு சார்பில் இருமுறையும் பஸ்கள் இயக்கப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய வசதிகள் இல்லாத நிலையிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் சேர்வதால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

வாரத்தில் இரு நாட்கள் சின்னாறு அருகே உள்ள கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு உடுமலையில் இருந்து அதிகளவு பக்தர்கள் செல்கின்றனர் அப்போது பஸ்களில் நிற்கமுடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. 

குறிப்பாக மாலை நேரத்தில் பஸ் இல்லாததால் இருமாநில பயணிகள் சிரமப்படுகின்றனர். இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் ஜீப்புகளில் அதிக  கட்டணம் கொடுத்து மலைப்பாதையில் தொங்கியபடி பயணிக்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆபத்தான ஜீப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் பயணிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News