உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் - தலைமையாசிரியரிடம் ஒப்புதல் பெறுவதை கட்டாயமாக்க வலியுறுத்தல்

Published On 2022-02-23 05:24 GMT   |   Update On 2022-02-23 05:24 GMT
மராமத்து பணிகள் சரிவர பூர்த்தி செய்யப்படாமலேயே ஒப்பந்ததாரருக்கு பணிக்கு உண்டான முழுத்தொகை கை மாறுகிறது.
உடுமலை:

உடுமலை கல்வி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் அதிகப்படியான மாணவர்கள், புதிதாக அரசுப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரட்டிப்பாகியுள்ளது. கூடுதலாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள், கழிப்பறை, குடிநீர் கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன. 

அவ்வகையில், தற்போது பல பள்ளிகளில் தளவாடப் பொருட்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல் என மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர், பொதுப்பணித்துறைக்கு அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பள்ளிகளில் நேரில் ஆய்வு நடத்தி திட்ட மதிப்பீடு தயாரிப்பதோடு நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் மேற்கொள்கின்றனர்.

ஆனால் மராமத்து பணிகள் சரிவர பூர்த்தி செய்யப்படாமலேயே ஒப்பந்ததாரருக்கு பணிக்கு உண்டான முழுத்தொகை கை மாறுகிறது. பணிகளை முழுமையாக முடித்துத்தர கோரினால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. பள்ளித்தலைமையாசிரியர்களும் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

இதனால் பள்ளிகளில் எந்தவொரு மேம்பாட்டுப் பணிகள் செய்தாலும் ‘எல்லாம் சரியாக முடிக்கப்பட்டது என்ற தலைமையாசிரியரின் ஒப்புதல் கையொப்பம் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும். அப்போது மட்டுமே மேம்பாட்டுப்பணிகள் முழுமையாக பூர்த்தியாகும் என பள்ளித் தலைமையாசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News