உள்ளூர் செய்திகள்
தனது மகன்களுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்கு ஓட்டு போட ஆர்வம் இல்லை- பிரேமலதா

Update: 2022-02-19 09:09 GMT
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 156 இடங்களில் தேமுதிக போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்.
சென்னை:

சென்னை சாலி கிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தனது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் வந்து 11.20 மணிக்கு வாக்குகளை பதிவு செய்தார்

அதன் பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பிரேமலதா கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் வாக்களித்து அவர்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வாக்குப்பதிவு மிக குறைவாக உள்ளது என பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள். நான் பிரச்சாரம் சென்ற இடங்களில் எல்லாம் மக்களிடம் தேர்தலின்போது ஜனநாயக கடமையை அனைவரும் தவறாமல் ஆற்ற வேண்டும் என்று கூறினேன்.

நமது வாக்கை நாம் பதிவு செய்வதன் மூலம் நமது ஜனநாயக கடமையை ஆற்றிய பெரும் பங்கு நமக்கு சேரும். அதே போல நானும் இன்று எனது மகன்களுடன் தேர்தலில் வாக்களித்து உள்ளேன்.

எனது ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளேன். கேப்டன் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கொரோனா தொற்று காரணமாக வாக்களிக்க வரவில்லை. தமிழகம் முழுவதும் நான் பிரச்சாரம் செய்தபோது மக்களிடம் பார்த்த காட்சிகளை நான் இப்போது பதிவிட விரும்புகிறேன்.

நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு வாய்ப்பு இந்த தேர்தலில் கிடைத்திருக்கும்.

ஆனால் தி.மு.க.வை தவிர அனைத்து கட்சிகளும் இந்தத் தேர்தலில் தனியாகத்தான் போட்டியிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இந்த முறை முதன்முதலாக புதிய முறையில் தேர்தல் வருகிறது. எனவே வாக்கு சதவீதம், ஓட்டு பிரிவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்த தேர்தல் முறையான ஒரு தேர்தலாக எந்தவித ஆட்சி பலம், அதிகார பலம் பணபலத்தை மீறி மக்கள் ஓட்டு போட்டால் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.

தே.மு.தி.க.வின் வாக்கு வங்கி இந்த தேர்தலில் பார்க்கலாம் எங்களது கட்சி சார்பில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். ஆனால் பல்வேறு இடங்களில் பிரசாரத்தின்போது கொலுசு கொடுக்கிறார்கள். பணம் கொடுக்கிறார்கள்.

ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள். மூக்குத்தி கொடுக்கிறார்கள் இது வன்மையாக கண்டிக்கக்கூடிய வி‌ஷயம். இது காவல்துறை மற்றும் அதிகாரிகள் துணையுடன் செயல்படுத்தப்படுகிறது. கரூர் கோவை, சென்னை பல இடங்களில் இதுபோல் நடந்து உள்ளது.

இது நிச்சயமாக தடுக்கப்பட வேண்டும் அதனால் நியாயமான தேர்தல் நடந்தால் எங்கள் கட்சிக்கு நியாயமான வாக்கு சதவீதம் மீண்டும் கிடைக்கும். ஆனால் எப்படி முடிவுகள் வரும் என்று தெரியவில்லை . பிரச்சாரத்தின்போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தடுக்கவில்லை மக்களுக்கு இந்த ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை இல்லை. ஓட்டுக்கு காசு, பணம் கொடுத்து மறுபடியும் ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள் என்ற மனவேதனையில் வெறுப்பின் காரணமாக மக்கள் ஓட்டு போட வரவில்லை.

மக்களிடம் தொடர்ந்து வெறுப்பு நிலவி வருகிறது. யாருக்கும் ஓட்டு போட ஆர்வமில்லை. வருடா வருடம் இதுபோன்ற நிலைதான் ஏற்படுகிறது. வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வெறுப்பின் உச்சத்தை மக்களிடம் காணமுடிந்தது. ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 156 இடங்களில் தேமுதிக போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அது வரவேற்கத்தக்கதாகும் .

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News