உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் உள்பட 32 பேருக்கு கொரோனா

Published On 2022-01-29 04:12 GMT   |   Update On 2022-01-29 04:12 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 1,779 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் தாராபுரம் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர், சுகாதார ஊழியர் உள்பட 180க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் இங்கு பணிபுரியும் டாக்டர், செவிலியர், அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், ஆபரேசன் தியேட்டர் ஊழியர், மருத்துவமனை பணியாளர் 3 பேர், அலுவலக பணியாளர் ஒருவர், வார்டு எண் 500ல் ஒருவர், சலவையக ஊழியர் 3பேர் என 32 பேருக்கு இதுவரை தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து திருப்பூர் மருத்துவ கல்லூரி டீன் முருகேசன், தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகிய 2பேரும் ஆலோசித்து தொற்று பாதித்தவர்களுக்கு விடுப்பு வழங்கி தேவையான மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்து அவரவர் வீட்டுத் தனிமையில் இருந்து கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மீதமுள்ள மற்ற பணியாளருக்கு வேலைப்பளு கூடியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 1,779 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்து 17 ஆயிரத்து 664 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 986 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 865 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 742 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவுக்கு பலி இல்லை. இதனால் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 1,037 ஆக உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News